தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதனால் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.