தேர்வு அச்சத்தை போக்க அரசின் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தேர்வு அச்சத்தை போக்க அரசின் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Update: 2020-09-13 07:29 GMT
சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு பயத்தால் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த 9-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மதுரையில் ஜோதிஸ்ரீதுர்கா என்ற மாணவியும், தர்மபுரியில் ஆதித்யா என்ற மாணவரும், திருச்செங்கோட்டில் மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் விதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தோல்வி குறித்த அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும், பெற்றோர்கள் மாணவர்களை தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து கருத்து தெரிவித்த போது, தேர்வு அச்சத்தை போக்க அரசின் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார். தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 7,417 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளதாக தெரிவித்த அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்