விவசாயிகள் நிதியுதவி திட்ட சரிபார்ப்பு முறையில் அதிரடி மாற்றம் -வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தகவல்
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மாநில அளவில் பரிசீலிக்கப்படும் என்று வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
சென்னை,
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மாநில அளவில் பரிசீலிக்கப்படும் என்று வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்படி, நிலமுள்ள விவசாயி ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் அரசு அலுவலர்களின் உதவியோடு சிலர் முறைகேட்டில் ஈடுபட்டனர். அந்த வகையில் போலி ஆவணங்களை பதிவு செய்து தகுதியில்லாதவர்கள் லட்சக்கணக்கில் இந்த திட்டத்தில் இணைத்துவிட்டனர்.
அந்த வகையில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஆனாலும் அரசு விடாமல் அந்த தகுதியற்ற நபர்களை கண்டறிந்து பணத்தை மீட்டு வருகிறது. மேலும், பல இடங்களில் தண்டோரா போட்டு, தவறாக பணம் பெற்றிருந்தால் அதை திருப்பி செலுத்துங்கள் என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 80 பேரை வேலையில் இருந்து அரசு நீக்கியுள்ளது. பல அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சரிபார்ப்பு முறை மாற்றம்
இதுபற்றி வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-
இந்த திட்டத்தின்படி வட்டார அளவில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதில் முறைகேடு நடந்தது தெரிய வந்ததும், வட்டார அளவில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கும் முறையை நிறுத்த கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி உத்தரவிடப்பட்டது. அதோடு கடவுச்சொற்களும் மாற்றப்பட்டன.
பி.எம். கிசான் என்ற இந்த திட்டத்தில் புதிதாக விவசாயிகள் நேரடியாக வலைதளம் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். புதியமுறைப்படி, இந்த பதிவு விவரங்களை களங்களுக்கு சென்று வருவாய் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அந்த விண்ணப்பத்தை ஏற்று அவற்றை பட்டியலிட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்புவார்கள். கலெக்டர்கள் அதை சரிபார்த்து மாநில வேளாண்மை துறைக்கு பரிந்துரைப்பார்கள். மாநில அளவில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
அந்த வகையில், வேளாண் தலைமையகத்திலும் அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். இதற்கான உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் அல்லாத நபர்கள், இந்த திட்டத்தில் பயனடைவதை தடுக்க இந்த புதிய முறையை அரசு வகுத்து வருகிறது.
ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெறும் தகுதியான விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும். இந்த நிதியுதவி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தாமல் விவசாயிகளின் பதிவு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முறைகேடாக எடுக்கப்பட்ட பணத்தை திருப்பி பெற்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நேற்று வரை ரூ.46 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.