ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? - கமல்ஹாசன்
ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாக பேசிய ஆடியோவில் கூறி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களிடையே நீட் தேர்வு பெரும் மன அழுத்ததை ஏற்படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப்போவது என்ன? என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?
மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!” என்று பதிவிட்டுள்ளார்.