ரவுடியை சுட்டு கொன்றதற்கு இன்ஸ்பெக்டர் கூறும் காரணம் சினிமாத்தனமாக உள்ளது; ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

ரவுடியை சுட்டு கொன்றதற்கு இன்ஸ்பெக்டர் கூறும் காரணம் சினிமாத்தனமாக உள்ளது என ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.

Update: 2020-09-10 19:12 GMT
சென்னை,

சென்னை அயனாவரம் ரவுடி சங்கரை போலீசார் சுட்டு கொன்றது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி, சங்கரை போலீசார் சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் சங்கரசுப்பு வாதிட்டார்.

மேலும் எதற்காக துப்பாக்கியால் சுட்டேன்? என்று இன்ஸ்பெக்டர் கூறியுள்ள காரணங்கள் எல்லாம் சினிமாத்தனமாக உள்ளதாகவும், சங்கரின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி தடயவியல் துறை தலைவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதுகுறித்து கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கூடுதல் மனு நீதிபதி, அரசு தரப்பு வக்கீல் ஆகியோருக்கு கிடைக்காததால், விசாரணையை வருகிற 14ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்