விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி, மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே ரூ.52 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற 31 திட்ட பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத் துறை பால்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.19 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், பல்வேறு துறைகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-
கொரோனா எளிதாக பரவக் கூடியது. அரசின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை குணப்படுத்துவது கடினம் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் நம்முடைய டாக்டர்கள் தனித் திறமையால் ஆஸ்பத்திரிகளில் உரிய சிகிச்சை அளித்து வருவதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்து வருவதை காணமுடிகிறது. அரசு எடுத்த சரியான நடவடிக்கையால் இறப்பு குறைந்து உள்ளது. காய்ச்சல் முகாம்கள் மூலம் பரிசோதனை செய்து நோய் அறிகுறி ஏற்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம். இதனால் நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.
அதிக உளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிகிச்சையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ‘மினி கிளினிக்’ ஆரம்பிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’குகள் தொடங்கப்பட உள்ளன. இதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், 2 மருத்துவ உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் அச்சப்படுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காகவே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ‘மினி கிளினிக்’ திட்டத்தை அரசு கொண்டு வந்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஜவ்வாதுமலையில் தனி வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதே?.
பதில்: மாணவர் சேர்க்கை எப்போதும் குறைக்கப்பட வாய்ப்பே கிடையாது. அதிகப்படுத்தத்தான் வாய்ப்பு இருக்கும்.
கேள்வி: திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?.
பதில்: மாநகராட்சியாக தரம் உயர்த்த நேரம் வரவில்லை. அதற்கான நேரம் வரும்போது அரசு பரிசீலனை செய்யும்.
கேள்வி: திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் எந்த இடத்தில் அமைக்கப்படும்?.
பதில்: மக்கள் விரும்பும் இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். மக்கள் ஒரு இடத்தை கூறி இருக்கிறார்கள். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.
கேள்வி: ‘அரியர்’ தேர்வு தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மீதான எச்சரிக்கை குறித்து தங்களின் கருத்து?.
பதில்: உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவாக பத்திரிகைகளில் குறிப்பிட்டு உள்ளார். அதுதான் உண்மை.
கேள்வி: தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்தை கர்நாடக அரசு தடுத்து வருகிறது. அதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?.
பதில்: மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர் பிரச்சினையை தற்போது உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி, அண்டை மாநிலத்துக்கு செல்லும் நதிநீரை தடுக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு தடுக்கின்ற பட்சத்தில், தண்ணீரை திருப்பிவிடும் பட்சத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. எனவே நமது உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். உரிமையை நிலைநாட்ட அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கேள்வி: பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?.
பதில்: விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டுபிடித்ததே ஜெயலலிதாவின் அரசுதான். அதை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 13 மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ளது. தகுதியுடைய 41 லட்சம் விவசாயிகள் இடம் பெற்று இருந்தனர். ஆனால் இந்த 4 மாத காலத்துக்குள் இது 46 லட்சமாக உயர்ந்தது. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் இத்திட்டத்தில் பணம் பெற்றதால் சந்தேகம் எழுந்தது. இத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு நடந்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டை, குடும்பஅட்டை கொண்டு தானாக பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியதால் இந்த தவறு நடந்து உள்ளது. இதனால்தான் இந்த பிரச்சினை எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தில் 5 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 81 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 34 ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை குறைத்துக் காட்டுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இது ஒரு தவறான செய்தி. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், யாராவது எழுதி கொடுத்தால் அதை அப்படியே தெரிவிக்கிறார். 2019-2020-ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது இதுகுறித்து சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அவை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் எதுவும் மறைக்கப்படவில்லை. அவர் 81 கொலைகள் மறைக்கப்பட்டதாக கூறுகிறார். அவர் படித்துப் பார்க்காமல் யாரோ கொடுத்த அறிக்கையை அப்படியே வெளியிட்டு இருக்கிறார். இது பச்சை பொய் என்பதை நான் ஆதாரத்தோடு தெரிவித்து உள்ளேன்.
கேள்வி: 8 வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இது மத்திய அரசின் திட்டம். நாடு வளர்ச்சி அடைகிறது. நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2001-ல் இருந்த வாகனங்களையும் தற்போது உள்ள வாகனங்களையும் ஒப்பிட்டால் 350 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதனால் சாலையை விரிவுபடுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே தான் மத்திய அரசு சாலை விரிவாக்கத்தை மேற்கொண்டு உள்ளது. நிலம் எடுக்கும் பணியைத்தான் மாநில அரசு மேற்கொண்டு இருக்கிறது. எல்லாம் மத்திய அரசின் நிலை தான். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
மேலும், பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும் என்றால் தொழிற்சாலைகள் அதிகமாக வர வேண்டும். அப்படி தொழிற்சாலைகள் அதிகம் வரவேண்டும் என்றால் நாட்டில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். எந்த மாநில உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறதோ அந்த மாநிலத்தில்தான் தொழிற்சாலைகள் வளர்ச்சி அடையும்.
தி.மு.க. ஆட்சியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 794 கிலோ மீட்டர் சாலையை எடுத்தார்கள். அப்போது விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என்றும், இப்போதுதான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன. அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு, விபத்தில்லா பயணம், குறைந்த நேர பயணம் போன்ற அடிப்படையில்தான் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்து உள்ளது.
தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கனரக வாகனங்கள் செல்ல வசதியாக மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டு வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.