அமைச்சருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

அமைச்சருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2020-09-09 01:00 GMT
சென்னை,

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கொடுக்கப்பட்ட டெண்டர் முறைகேடு புகாரை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ், தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ், இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரிக்காமல், நேரடி விசாரணை மேற்கொள்ளும் விதமாக தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார். தி.மு.க. தரப்பில் ஆஜரான வக்கீல் நீலகண்டன், எந்த முறை விசாரணைக்கும் தயாராக உள்ளதாக கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டதால், இந்த வழக்குகளையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்