பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு - 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகவும், அதில் ஈடுபட்ட 80 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
சென்னை,
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகவும், அதில் ஈடுபட்ட 80 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
இது குறித்து தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு ககன்தீப்சிங் பேடி அளித்த பேட்டி வருமாறு:-
பிரதமர் கிசான் திட்டம் பற்றி பல்வேறு செய்திகள் வந்த வண்னம் உள்ளன. இது கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம். அனைத்து விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் வழங்கும் திட்டம் இது.
இந்த ஆண்டு மார்ச் மாத அளவில் 39 லட்சம் பேர் தகுதி பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் சில பெயர்கள் விட்டுப்போனதாக வந்த புகாரைத் தொடர்ந்து அதற்கான இணையதளத்தில் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, விவசாயி ஒருவர் தனது ஆதார், வங்கி கணக்கு போன்ற விவரங்களை பாஸ்வேர்டை உருவாக்கி அதில் தானே பதிவு செய்யலாம்.
முன்பு, தமிழக அரசு ஒவ்வொருவரின் விவரங்களையும் மார்ச் மாதம் வரை சரிபார்த்து அனுமதித்தது. கொரோனா காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் இறங்கிவிட்டனர். விவசாயிகளின் பாஸ்வேர்டு, லாக்இன் ஐ.டி. போன்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இருந்தன. அவற்றை சரிபார்ப்பதற்கான காரணங்களுக்காக அவற்றை வைத்திருந்தனர்.
ஆனால் அந்த விவரங்கள், ‘டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்’களிடம் இருந்து சில தனியார் கம்ப்யூட்டர் மையங்கள், புரோக்கர்கள் திருடி அல்லது அதை வாங்கி தவறாக பயன்படுத்தி, பொதுமக்களின் பெயரை வாங்கி அவர்களின் பெயரை பதிவு செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிதான் இதன் மையமாக இருக்கிறது.
மத்திய அரசின் கொரோனா பணம் வருகிறது என்று கூறி அப்பாவி பொதுமக்களின் பெயர், ஆதார் எண் போன்றவற்றையும் ரூ.500 தொகையையும் வாங்கியுள்ளனர். இதில் அதிகமாக கம்ப்யூட்டர் பொது சேவை மையங்கள் ஈடுபட்டுள்ளன.
ஆகஸ்டு மாதத்தில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பெயர் அதிகமாக இருந்தது.
உடனடியாக மாவட்ட கலெக்டர்களுக்கு இதை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது. பின்னர் ஊடகங்களிலும் இதுபற்றிய செய்திகள் வந்தன. எந்த வகை ஊழலையும் தமிழக அரசு சகிக்காது. இதுபற்றி ஆய்வு செய்ய 10 குழுக்கள் கடந்த ஆகஸ்டு 2-வது வாரத்தில் அனுப்பப்பட்டன. 13 மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டோம். அனைத்து பெயரையும் சரிபார்க்க உத்தரவிட்டோம்.
இதுவரை நடத்தப்பட்ட சரிபார்த்தலில் 5.50 லட்சம் பயனாளிகள், சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று கண்டறிந்துள்ளோம்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் கம்ப்யூட்டர் மையங்கள், புரோக்கர்கள் ஒரு அணியாக நின்று செயல்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சில அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். 3 அதிகாரிகள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர் பணியாளர்கள், பிளாக் மேலாளர் உள்பட 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது சகிக்க முடியாத குற்றம். தகுதியற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியும். கடந்த 15 நாட்களில் ரூ.32 கோடியை திருப்பி எடுத்துவிட்டோம். இன்னும் 3 மடங்கு பணத்தை விரைவில் எடுத்துவிடுவோம். இன்னும் 45 நாட்களுக்குள் தகுதியற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட மொத்த பணத்தையும் மீட்டுவிடுவோம்.
இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஏனென்றால், அனைவரது விவரங்களும் அரசிடம் உள்ளன. இந்த விஷயத்தில் தமிழக அரசை பாராட்டி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா விவகாரங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்தியபோது, தனியார்கள் மூலம் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளன. ரூ.110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இந்த தொகை மேலும் ரூ.10 கோடி வரை கூடுவதற்கும் வாய்ப்புள்ளது.
வட்டார அதிகாரிகள் அளவில் தகுதியானவர்களை சரிபார்க்கும் பணி நடந்தது. அவர்கள் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். கம்ப்யூட்டர் நுட்பங்கள் தெரியாது. எனவே டேட்டா ஆபரேட்டர்கள் மூலம் அதை செய்திருக்கிறார்கள். இவர்கள் அந்த தகவலை வெளியே கொண்டு சென்றிருக்கிறார்கள்.
எனவே பாஸ்வேர்டு விஷயத்தில் இனி புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு எந்த தடையும் இல்லாமல் உதவி கிடைக்கும். இதில் தகுதியற்ற நிலையில் சேர்க்கப்பட்ட அப்பாவி விவசாயிகள் மீதும் அரசு கோபப்படவில்லை. ஏனென்றால் அவர்களை கம்ப்யூட்டர் மையங்கள் ஏமாற்றியுள்ளன.
அரசு அதிகாரிகள் இதில் உடந்தையாக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகள் தகுதியுள்ளவர்கள். அதே இணையதளத்தில் தகுதியுள்ளவர்கள் பெயர் பதிவு செய்யலாம். அடுத்த தவணை டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
ஒரே குடும்பத்தில் உள்ள அனைவரது வங்கி கணக்கிற்கும் பணம் போனதாக தகவல் உள்ளது. தகுதியுள்ள கணக்கை மட்டும் வைத்து விட்டு மற்ற வெவ்வேறு கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.