தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் - துரைமுருகன்
தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வரும் 14 ஆம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையை குறைந்தது 7 நாட்களாவது நடத்த வேண்டும் என்றார். மேலும், அவர் கூறுகையில், “ மாநில அரசை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது”எனவும் குற்றம் சாட்டினார்.