குவைத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்
குவைத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திய ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் குவைத்தில் சிக்கி தவித்தவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்தவர்கள் மருத்துவம், குடியுரிமை சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த 35 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரிடம் இருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தனர். அதில் கைப்பையில் ரகசிய அறை அமைத்து, அதன் உள்ளே 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக பிடிபட்ட வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.