மாரத்தான் பதிவு கட்டண நிதி ரூ.23 லட்சத்து 41 ஆயிரம்: தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு, மாரத்தான் பதிவு கட்டண நிதியான ரூ.23 லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சென்னை,
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்’ கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடந்த இந்த ஓட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 8 ஆயிரத்து 541 பேர் இணைய வழியாக பங்கு பெற்றனர். அவர்களிடம் இருந்து பதிவு கட்டணமாக ரூ.23 லட்சத்து 41 ஆயிரத்து 726 பெறப்பட்டது.
இந்த மாரத்தான் ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேற்கண்ட நிவாரண நிதி மற்றும் சான்றிதழை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிதி, கொரோனா பேரிடர் நிதியாக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.