108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-09-06 07:45 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனாத் தொற்று பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி ஒருவரை, 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, எக்ஸ்ரே எடுப்பதற்காக அவசரப் பிரிவுக்கு அழைத்து சென்றது.

வாகனத்தில் இருந்து மூதாட்டியை இறக்கி கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றபோது, வாகனத்தில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸ் முழுவதும் தீ பரவியதால் வாகனம் முழுவதும் சேதமானது. எதிர்பாராதவிதமாக நடந்த தீ விபத்தால், மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

இந்நிலையில்  செங்கல்பட்டில் 108 ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு, தென்காசியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் கொரோனா நிலவரம் குறித்து பேசிய அவர், தமிழகத்தில் கோவை, ஈரோடு திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளும், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், தளர்வுகளால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா, குறையுமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரிய வரும்.

அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். விதிமீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்