திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு

திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதன் சொத்து மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாகும்.

Update: 2020-09-05 23:34 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்துள்ள திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கும், ஆளவந்தான் கோவிலுக்கும் சொந்தமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்போரூர் பகுதியில் உள்ளது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு கும்பல்கள் கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிகின்றன.

இதற்காக இந்த கும்பல்கள் போலி ஆவணங்களை தயாரித்தும், ஆள்மாறாட்டம் செய்தும் விற்பனை செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதை உடனே தடுத்து நிறுத்தவில்லை என்றால், பக்தர்களால் கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த நிலங்களை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த கும்பல் விற்பனை செய்து விடும். எனவே, இந்த கோவில்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும்.

அதனால், இந்த 2 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவிட்டு அது தொடர்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக வருவாய் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அந்த இடைக்கால அறிக்கையில், சர்வே எண், எவ்வளவு சதுர அடி நிலம், கடந்த 10 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ்கள், பட்டா, சிட்டா, ஏ ரிஜிஸ்டர், அடங்கல், நிலத்தின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும் என்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய திருப்போரூர் முருகன் கோவில், ஆளவந்தான் கோவில் செயல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யவோ, வில்லங்க சான்றிதழ் வழங்கவோ கூடாது என்று தமிழக பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., திருப்போரூர் சார்பு பதிவாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வக்கீல் கார்த்திகேயன், மனுதாரர் ஜெகன்நாத் ஆகியோர் வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் வகையில், ஒரு வாரத்துக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வருகிற 10-ந் தேதி வரை இரு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

வருவாய்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி. உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்