மின்சார ரெயில் சேவை நாளை தொடங்குவதாக வதந்தி - தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மறுப்பு

மின்சார ரெயில் சேவை நாளை தொடங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-05 18:59 GMT
சென்னை,

ஊரடங்கால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு 13 சிறப்பு ரெயில்களும் நாளை முதல் இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே ஆயத்தமாகி வருகிறது. தொடர்ந்து மின்சார ரெயில்களை விரைவில் இயக்குவதற்கான ஆலோசனையும் நடந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் அனைத்து மின்சார ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளிவந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் கூறியதாவது:-

மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரபூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. மின்சார ரெயில் சேவை 7-ந்தேதி (நாளை) முதல் தொடங்கப்படும் என தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் அனைத்தும் முற்றிலும் தவறானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்