தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்து 516 ஆக உயர்வு; சென்னையில் பாதிப்பு குறைவு

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் நேற்று கொரோனா தொற்று குறைந்துள்ளது.

Update: 2020-09-03 23:45 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,447 ஆண்கள், 2,445 பெண்கள் என மொத்தம் 5,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 191 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 807 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 968 பேரும், கோவையில் 593 பேரும், கடலூரில் 590 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, பெரம்பலூரில் தலா 21 பேர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 48 லட்சத்து 80 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 69 ஆயிரத்து 135 ஆண்களும், 1 லட்சத்து 76 ஆயிரத்து 687 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 322 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 58 ஆயிரத்து 113 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 58 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 92 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 29 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 7 பேரும், சேலத்தில் 4 பேரும், கோவை, நாகை, திருவாரூர், திருப்பூரில் தலா 3 பேரும், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சை, தேனி, திருவண்ணாமலை, நெல்லை, விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, தென்காசி, திருப்பத்தூரில் தலா ஒருவரும் என 28 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,516 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 110 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,444 பேரும், கோவையில் 486 பேரும், சேலத்தில் 350 பேரும், திருவள்ளூரில் 335 பேரும், கடலூரில் 315 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 52 ஆயிரத்து 70 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 921 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 862 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 161 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்