திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி - இன்றுமுதல் பதிவு செய்யலாம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-09-03 23:39 GMT
திருச்செந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி தினமும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக கோவிலில் பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த மாதம் (செப்டம்பர்) ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க உத்தரவிட்டு, சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு கடந்த 1-ந் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவுப்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் தினமும் 2 ஆயிரம் பேர் இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் மூலவர் மற்றும் சண்முகர் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கோவிலுக்குள் பூஜை பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் முன்பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும் தரிசனத்திற்கு வரும்போது, அனுமதிச்சீட்டுடன் ஆதார் அட்டையையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ள ஆவணித் திருவிழா நிகழ்ச்சிகள் நீங்கலாக இடைப்பட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்