அரசு அலுவலக பணி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு 31-ந் தேதிவரை விலக்கு அரசாணை வெளியீடு

அரசு அலுவலக பணி மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு 31-ந் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-23 23:43 GMT
சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றை தவிர்க்க, அரசுத் துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணியை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் பலமுறை அரசை கேட்டுக் கொண்டு வருகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் இம்மாதம் 15-ந் தேதிவரை விலக்களித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில், 31-ந் தேதிவரை தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அலுவலக பணி மேற்கொள்ள 31-ந் தேதிவரை விலக்கு அளிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த அரசு, 31-ந் தேதிவரை மட்டும் அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்