தொழிலாளர் நல வாரியங்களில் 54,255 பேர் விண்ணப்பம் அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

தமிழகத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், சலவைத் தொழிலாளிகள் நல வாரியம் என 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் இயங்கி வருகின்றன.

Update: 2020-07-21 20:55 GMT
சென்னை,

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், சலவைத் தொழிலாளிகள் நல வாரியம் என 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் இயங்கி வருகின்றன. இந்த வாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பெயரை பதிவு செய்வதற்கு மாவட்ட அளவிலான தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

சிரமத்தை நீக்கும் வகையில், அவர்கள் இருந்த இடத்திலேயே http://labour.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இந்த வாரியங்களில் உறுப்பினராக பெயர் பதிவு செய்யும் வசதி கடந்த ஜூன் 19-ந் தேதி தொடங்கப்பட்டு, இம்மாதம் 20-ந் தேதியில் இருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 21-ந் தேதிவரை (நேற்று) தமிழகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களிலும் 54 ஆயிரத்து 255 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை பதிவு செய்யாதவர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்