மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ‘டுவிட்டர்’ கணக்கு கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ‘டுவிட்டர்’ கணக்கை தொடங்கி அதில் தவறான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

Update: 2020-07-21 00:15 GMT
சென்னை,

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 17-ந் தேதி அன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ‘டுவிட்டர்’ கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில், கறுப்பர் கூட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை தி.மு.க. செய்யும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டத்திற்கு தி.மு.க. எந்த விதத்திலும் ஆதரவு அளிக்கவில்லை. சட்டவிரோதமாக எங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த போலி ‘டுவிட்டர்’ கணக்கு தொடங்கி, அதில் இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த புகார் மனு மீது போலீசார் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்