போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் தாய்-மகள் விஷம் குடித்தனர் உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு

இருதரப்பினர் மோதல் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

Update: 2020-07-20 23:58 GMT
ஸ்ரீவைகுண்டம்,

இருதரப்பினர் மோதல் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை அருகே செய்துங்கநல்லூர் பக்கமுள்ள முத்தாலங்குறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரம்மாள் (40). இவர்களுக்கு 2 மகன்களும், ஐஸ்வர்யா (17) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் சங்கரம்மாள் வளர்த்து வந்த ஆட்டை, மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவரின் வீட்டில் இருந்த நாய் கடித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இருதரப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலையில் முத்தாலங்குறிச்சிக்கு சென்ற செய்துங்கநல்லூர் போலீசார், வீட்டில் இருந்த சங்கரம்மாளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேல்விசாரணைக்காக சங்கரம்மாளையும், அவரது மகள் ஐஸ்வர்யாவையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சங்கரம்மாளும், ஐஸ்வர்யாவும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தனர். உடனே, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தற்கொலை முயற்சி குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு வைத்து முத்தாலங்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே, சங்கரம்மாளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தாய்-மகள் விஷம் குடிக்க காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் காரணமாக அந்த வழியாக வாகன போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருந்தபோதும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்