கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ கைதான சுரேந்திரனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைதான சுரேந்திரனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
சந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து, கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் அவதூறாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது.
இதை அறிந்து பா.ஜ.க., இந்து மக்கள் கட்சியினர் மற்றும் இந்து மத அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். பலர் போலீசில் புகார் செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த சென்னை வேளச்சேரி செந்தில்வாசன் (வயது 49) என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுரேந்திரன் (வயது 36) என்பவரை புதுவை அரியாங்குப்பத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதன்பின்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் நேற்று சென்னை ராயபுரத்தில் உள்ள எழும்பூர் கோர்ட்டு நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவரை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கைதான சுரேந்திரனை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் எனக்கருதி, பா.ஜ.க.வினர் எழும்பூர் கோர்ட்டில் கூடி கோஷமிட்டனர். சுரேந்திரனை நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததை அறிந்த பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.