அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற தீபக் - போயஸ் கார்டனில் திடீர் பரபரப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டுக்கு அவருடைய அண்ணன் மகன் தீபக் நேற்று திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவருடைய மறைவுக்கு பிறகு, இந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் இந்த வீடு கொண்டு வரப்பட்டு வருவாய் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வீட்டுக்கான சட்டபூர்வமான முதல் நிலை வாரிசாக தீபா மற்றும் தீபக் என்று அறிவித்தது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அங்கு காவல் பணியில் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் இருந்தார். அவரிடம் தீபக், ‘ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கான வாரிசாக ஐகோர்ட்டு என்னை அறிவித்து உள்ளது. எனவே வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன்’ என்று கூறி தீபக், கோர்ட்டு உத்தரவு நகலை காண்பித்தார். இதற்கிடையில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்கு செல்ல போலீசார் செல்ல அனுமதிக்காததால் திரும்பி போய்விட்டதாக தகவல் வெளியானது.
டி.வி. அலுவலகம்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் வீடு முதலில் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது சென்னை கலெக்டர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கு பாதுகாப்பு மட்டும் அளித்து வருகிறோம். தீபக் ஜெயலலிதாவின் வீட்டை ஒட்டி உள்ள பழைய ஜெயா டி.வி. அலுவலக வாசல் வழியாக உள்ளே சென்றார். அங்கு இருந்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். 10 நிமிடம் உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்து சிறிது நேரம் நின்று விட்டு காரில் ஏறி தீபக் சென்று விட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.