போலி இ-பாஸ் விவகாரம்: கைதான டிரைவருக்கு ஜாமீன் மறுப்பு
போலி இ-பாஸ் விவகாரம் தொடர்பாக கைதான டிரைவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பாஸ் வழங்கும் முறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கும், அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை பேசின் பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், கலெக்டர் அலுவலக இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயக்குமார், டிரைவர்கள் வினோத்குமார், தேவேந்திரன், மனோஜ்குமார் உள்பட சிலரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் குமரன், உதயக்குமார், மனோஜ்குமார், வினோத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் டிரைவர் தேவேந்திரன் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனுதாரர் தேவேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.