துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார். அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்து இரு மாவட்ட காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து நிலத்தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் இன்று போலீசார் கைது செய்தனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் காயத்ரி தேவி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.