நூற்றாண்டு விழா: நாவலர் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

நாவலர் நெடுஞ்செழியன் பிறந்தநாளையொட்டி, அவருடைய உருவப்படத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Update: 2020-07-11 22:45 GMT
சென்னை, 

நாவலர் நெடுஞ்செழியன் பிறந்தநாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக மீட்டெடுத்து புதிய வரலாறு படைத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்‘ என போற்றப்பட்ட நாவலர். 1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வலிமை மிகுந்த தூண்களில் ஒருவராக விளங்கியவர். 1955-ல் அண்ணாவின் அன்புக்கட்டளைக்கேற்ப, ‘சொல்லின் செல்வர்‘ ஈ.வெ.கி.சம்பத் முன்மொழிய, தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வழிமொழிய, கழகத்தின் பொதுச்செயலாளராக ஒருமனதாக நாவலர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்முனை போராட்டம் தொடங்கி கழகம் நடத்திய போராட்டங்களில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்த நாவலர், 1962-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக கருணாநிதி செயலாற்றினார். 1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, முதன் முதலாக ஆட்சி அமைத்தபோது, அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் நாவலர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். கருணாநிதி பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத்துறைகளுக்கு அமைச்சரானார்.

காலம் கருணையின்றி அண்ணாவை 1969-ல் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டபோது, கழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனிச் சிறப்பான தலைமை தேவைப்பட்டது. கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கருணாநிதியை முன்னிறுத்தினர். இடைக்கால முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருந்த நாவலர் மனவருத்தம் கொண்டிருந்த அந்தச்சூழலில், கழகத்தை கட்டிக்காக்கவேண்டும் என்ற உணர்வுடன் கருணாநிதியும், மற்றவர்களும் மேற்கொண்ட முயற்சிகள், நாவலரின் எண்ண அலைகள் அனைத்தும் நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட விவாதங்களுக்கு பிறகு, கழகத்தின் தலைவராக கருணாநிதி, பொதுச்செயலாளராக நாவலர், பொருளாளராக ‘மக்கள் திலகம்‘ எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, கழகம் எனும் பேரியக்கம் தொடர்ந்து பெரும் வளர்ச்சி காண்பதற்கு வழிவகுக்கப்பட்டது. பின்னர், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்ற நாவலர், இந்தியாவின் முன்னோடி திட்டங்கள் பலவற்றை கருணாநிதியின் ஆட்சி நிறைவேற்றியபோது, அதற்கு துணை நின்றார்.

நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் நிலைமைகளால், நாவலர் தனி இயக்கம் கண்டு, பின்னர் மாற்று முகாமில் இணைந்தபோதும், திராவிட இயக்கக் கொள்கைகளை கைவிடாமல் காப்பாற்றியவர். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளையும், அண்ணாவின் தமிழ் உணர்வையும் தன் மேடை பேச்சுகளில் உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தவர். தடம் மாறாத இத்தகைய கொள்கை பற்றினால், எந்நாளும் கருணாநிதியின் அளப்பரிய அன்புக்குரியவராக அவர் திகழ்ந்தார். மாற்றுக்கட்சியில் அவர் இருந்தபோதும் ‘நாவலர்‘ என்றே அவரை அன்புடன் அழைப்பார் கருணாநிதி.

2000-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி நாவலர் இயற்கை எய்தியதை அறிந்து வேதனையுற்ற அன்றைய முதல்-அமைச்சரான கருணாநிதி நேரடியாகச்சென்று, தன் கொள்கை சகோதரருக்கு இறுதி வணக்கம் செலுத்தினார். கருணாநிதி வளர்த்து காத்த அரசியல் நாகரிகமும், திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தகுதி மிக்கதோர் இடமும் கொண்ட நாவலரின் நூற்றாண்டு விழாவினை தி.மு.க., வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும், சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்