சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

Update: 2020-07-11 06:26 GMT
தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதை ஏற்று டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில், தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்