அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணி: தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்படும்

அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால், தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-10 21:34 GMT
சென்னை, 

கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப் பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக்கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு, சுத்திகரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த ஜூலை 13 மற்றும் 14-ந் தேதிகளில் 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டது. அனைத்து துறைகளின் அலுவலக நடைமுறைப்பிரிவும் (ஓ.பி.) அந்தந்த துறை செயலாளர்களின் அரங்கங்கள், அறைகள், சேம்பர்களுக்கான சாவிகளைஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

அந்த 2 நாட்களிலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து சாவிகளை பெற்று அங்குள்ள அலுவலகங்களை திறந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். அனைத்து அறைகளிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதுபோலவே இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும், நாளையும் தலைமைச் செயலகம் மூடப்படுகிறது. அங்கு 2 நாட்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்