சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-10 14:15 GMT
சென்னை,

கொரோனா பரவல் காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் பல தனியார் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே கணிணி மூலமாக பணி செய்யுமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது. அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்கள் மட்டும் வரவழைத்து நிறுவனங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல தனியார் ஐ.டி. நிறுவனங்கள் சார்பில், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணிக்கு வருபவர்களில் 90 சதவீதம் பேர் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகள் வரும் 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்