சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வருகை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. விசாரணை குழு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் வந்து சேர்ந்தனர்.

Update: 2020-07-10 11:00 GMT
தூத்துக்குடி,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்குவதற்காக டெல்லியில் இருந்து விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் கார் மூலமாக தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அணில்குமார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதற்கு அடுத்த கட்டமாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு விசாரணையை தொடர்ந்து நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்