விவசாயி தற்கொலை செய்த விவகாரம்: ஊழியர்களை கைது செய்யக்கோரி வங்கி முற்றுகை

விவசாயி தற்கொலைக்கு காரணமான ஊழியர்களை கைது செய்யக்கோரி தாராபுரத்தில் தனியார் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-08 21:45 GMT
தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மானூர் பாளையம் கிராமம் குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 55). விவசாயி. இவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2012-ல் நீண்ட கால விவசாய கடன் பெற்றிருந்தார். அந்த கடனை முறையாக செலுத்திய நிலையில், 2017-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். அவரது நிலத்தை மேம்படுத்தி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். 3 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் பற்றாக்குறை, தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும் கடன் தவணையை அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தவணை தொகையையும், அபராத வட்டியும் உடனே செலுத்த வேண்டுமென வங்கி அதிகாரிகள், விவசாயி ராஜாமணிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இல்லாமல் அவரால் தொடர்ச்சியாக தவணையை செலுத்த இயலவில்லை.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 வாரமாக வங்கிக் கிளை மேலாளர் மற்றும் வசூல் பிரிவு ஊழியர்கள் அவரது தோட்டத்திற்கு சென்று தொடர்ந்து மிரட்டியதாகவும், தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜாமணி தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து குண்டடம் போலீசார் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் வங்கி ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தாராபுரம் அந்த வங்கி முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் திரண்டு சென்று அந்த வங்கியை திடீரென்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பிரச்சினை குறித்து முடிவு செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்