கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய என்ஜினீயர் பணியிடை நீக்கம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய மாநகராட்சி என்ஜினீயரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2020-07-08 22:00 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சியுடன் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கைக்கோர்த்து உள்ளன. கல்லூரி மாணவ-மாணவிகளும் களப்பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் 15 மண்டலத்துக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரு மாநகராட்சி அதிகாரியின் தலைமையின் கீழ், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதோடு, வீடு வீடாக சென்று தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

அதன்படி ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட மண்ணடி வார்டில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதில் ஒரு கல்லூரி மாணவிக்கு கமலக்கண்ணன் காதல் வலை வீசி பேசிய ஆடியோ, ‘வாட்ஸ்-அப்’பில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே திருமணமான அவரின், காதல் தொல்லையை பொறுக்க முடியாமல், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புகாருக்கு உள்ளான உதவி என்ஜினீயர் கமலக்கண்ணன் மீது மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ‘வாட்ஸ்-அப்’ பதிவில், ‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணிடம், பெருநகர சென்னை மாநகராட்சி உதவி என்ஜினீயர் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக சில ஆரம்ப ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.’ என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்