தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து எழு நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,329 ஆக அதிகரித்தது. இதனால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மூன்றாவது நாளாக மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,385ல் இருந்து 1,450 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 2,214 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.