தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி

தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-07-03 08:40 GMT
சென்னை, 

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியதால், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகனத்தை வரவழைத்தார். அதன்படி கழிவுநீர் வாகனத்துடன் தொழிலாளர்கள் வந்தனர். இந்த பணியில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி (41), பாலா (20), மணிகண்டன் மகன் இசக்கிராஜா, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ் (19) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை முதலில் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தனர். தண்ணீர் முழுவதும் எடுக்கப்பட்ட பிறகு தொட்டியின் அடியில் படிந்து இருந்த கழிவுகளை அகற்றுவதற்காக தொட்டியின் மேல் உள்ள சிறிய பாதை மூலம் இசக்கிராஜா, தினேஷ் ஆகியோர் உள்ளே இறங்கினார்கள்.

அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் விஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார்கள். இதை பார்த்து தொட்டியின் மேல் நின்ற பாலா அவர்களை காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கினார். அவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதை கவனித்த பாண்டி 3 பேரையும் காப்பாற்றுவதற்கு உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த 4 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் 4 பேருமே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் 2.7.2020 அன்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்