10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-02 09:23 GMT
சென்னை, 

சென்னை தாம்பரத்தில் கொரோனா வகைப்படுத்துதல் மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ள நிலையில் மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்கப்படுகிறது.

தாம்பரத்தில் தற்போது திறக்கப்பட்ட இந்த மையத்தில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 300 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. ஏனென்றால் ஆக்சிஜன் வசதி மிக முக்கியம். மரண விகிதத்தைக் குறைப்பது நமது முக்கியமான நோக்கம். அதில் நாம் இந்தியாவிலேயே குறைந்த அளவில் இருக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக பல விலை உயர்ந்த மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதற்காக முதல்வர் ரூ.75 கோடி நிதி வழங்கியுள்ளார். 

போர்க்கால அடிப்படையில் மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம், அதனால்தான் எங்குமே படுக்கை வசதி இல்லை என்கிற நிலை இல்லை. தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகள் தவிர, அடுத்து ஓரிரு நாளில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் நவீன உபகரணங்கள், 700 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை தயாராகி வருகிறது. பல கட்டமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் அச்சத்தைத் தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 108 ஆம்புலன்ஸில் அழைத்துவரப்படும் நோயாளிகளுக்கு இசிஜி உட்பட 8 வகை சோதனைகள் செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனையில் கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்