அமைச்சர் வீரமணிக்கு எதிரான மிரட்டல் வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் வீரமணிக்கு எதிரான மிரட்டல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வேலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். இந்த நிலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி மூலமாக தொழிலதிபர் சேகர்ரெட்டி பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். ஆனால் நிலத்தின் குத்தகைதாரர்களான எங்களுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட தொகையை சேகர்ரெட்டி வழங்கவில்லை. அமைச்சர் வீரமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
இந்த இடத்தில் இருந்து எங்களை வெளியேற்ற போலீசார் மூலமாக சட்டவிரோதமாக அமைச்சர் முயற்சிக்கிறார். எனவே, அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும். எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘அமைச்சருக்கு எதிராக மனுதாரர்கள் அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அந்த புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடித்து வைத்து விட்டனர்.
தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.