டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை - மேலாளர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து மண்டலமாவட்ட மேலாளர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-06-19 22:45 GMT
சென்னை, 

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடுக்கப்படுகிற நடவடிக்கையின் ஆய்வு அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு சில்லறை விற்பனைப் பிரிவின் மின்னஞ்சலுக்கு ( tasm-a-c-rv2015@gm-a-il.com ) தினந்தோறும் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு முதுநிலை மண்டல மேலாளரும் தங்களது மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை விலை ஆய்வு செய்வதற்கு வாரந்தோறும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாவட்ட மேலாளர்களை நியமனம் செய்து 10 கடை எண்கள் குறித்து உத்தரவிட வேண்டும். ஒரு மாவட்ட மேலாளர், மற்ற மாவட்டத்தில் மாதத்திற்கு 40 கடைகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். மேலும், அந்தந்த மாவட்ட மேலாளர்கள் அவர்களது மாவட்டத்திற்குள்ளாகவும் மாதந்தோறும் 30 கடைகள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

அது தவிர, ஒவ்வொரு மண்டலத்திலுள்ள சிறப்பு பறக்கும் படை அலுவலர் வாரத்திற்கு 60 கடைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

உடனடி நடவடிக்கை

முதுநிலை மண்டல மேலாளர்களும் தங்களது மண்டலத்திற்குரிய கடைகளை வாரத்திற்கு 10 கடைகள் என மாதத்திற்கு 40 கடைகளை ஆய்வு செய்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மேலாளர்கள் இனிவரும் நாட்களில் தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை கண்டறிவதுடன், மற்ற மாவட்ட மேலாளர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தை தலைமை அலுவலக சில்லறை விற்பனைப் பிரிவுக்கு மாதந்தோறும் அனுப்பி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்