புதிதாக 2,115 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனாவில் இருந்து 30,217 பேர் மீண்டு உள்ளனர். சிகிச்சை பலனின்றி 41 பேர் நேற்று உயிரிழந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 2 ஆயிரத்து 75 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேருக்கும் என நேற்று 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதில் 1,279 பேர் ஆண்கள், 836 பேர் பெண்கள் ஆவார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 41 பேர் உயிரிழந்தனர். இதில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 26 பேரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 பேரும் அடங்குவர்.
உயிரிழப்பு பட்டியலில் சென்னையை சேர்ந்த 28 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 3 பேரும், நெல்லையை சேர்ந்த 2 பேரும், ஓசூர், கடலூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஒருவரும் இடம் பெற்று உள்ளனர். இதில் 31 பேர் பல்வேறு நாள்பட்ட நோய்கள் தாக்குதல் மற்றும் கொரோனா பாதிப்பாலும், 10 பேர் கொரோனா தாக்குதலால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 666 ஆக உயர்ந்து உள்ளது.
35 மாவட்டங்கள்
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,322 பேரும், வேலூரில் 103 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், திருவள்ளூரில் 86 பேரும், மதுரையில் 58 பேரும், காஞ்சீபுரத்தில் 39 பேரும், திருவண்ணாமலையில் 37 பேரும், விழுப்புரத்தில் 31 பேரும், கோவையில் 29 பேரும், தூத்துக்குடியில் 28 பேரும், நெல்லையில் 25 பேரும், ராமநாதபுரம், திண்டுக்கலில் தலா 22 பேரும், சேலம், சிவகங்கையில் தலா 18 பேரும், விருதுநகர், தேனியில் தலா 15 பேரும், தென்காசியில் 14 பேரும், திருச்சி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரியில் தலா 13 பேரும், திருவாரூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், புதுக்கோட்டை, திருப்பத்தூரில் தலா 8 பேரும், அரியலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில் தலா 7 பேரும், நீலகிரியில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும், தர்மபுரி, கரூரில் 3 பேரும், திருப்பூரில் இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,630 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 82 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 247 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி உள்ளனர்.
பரிசோதனை எண்ணிக்கை
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 242 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 129 பேரும், ரெயில் மூலம் வந்த 381 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,669 பேரும், கடல் மார்க்கமாக வந்த 7 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 428 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 27 ஆயிரத்து 537 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.