ரேஷன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் ஆர்.காமராஜ்
ரேஷன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரிசி, பருப்பை ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு, அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலிக் காட்சி மூலம் தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு 19-ந் தேதியில் (இன்று முதல்) இருந்து 30-ந் தேதிவரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் இன்னல்களை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1,000 வழங்கும் வகையில் ரூ.218.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கும்.
தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நெல் அரவை மானியத் தொகை ரூ.2,609 கோடி நிலுவையில் உள்ளது. அந்த தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரருக்கு இலவசமாக வழங்குவதற்கு தேவையான அரிசி மற்றும் பருப்பை அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை அனுமதித்து தேவையான அளவு ரேசன் பொருட்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இமேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.