சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பாடநூல்கள் விற்பனை இன்று தொடக்கம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்குகின்றன.
சென்னை,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பாடநூல்கள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 2 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரத்து 450 பாடநூல்கள் ஏற்கனவே அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பட்டு இருக்கிறது.
இதுதவிர விற்பனைக்காக 1 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 700 புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்து இருக்கின்றன.
இந்த நிலையில் பாடநூல்கள் தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்வதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட குடோன்களில் பாடநூல்கள் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. கடைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது.அதேநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாடநூல்கள் விற்பனை செய்யப்படாது என்று பாடநூல் கழகம் தெரிவித்து இருக்கிறது.