கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

‘கூடுதலாக சில லட்சம் கருவிகளை கொள்முதல் செய்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்‘, என தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-18 23:30 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் சீரான அளவில் பரவலான முறையில், ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போனதால் நமது மாநிலம் இப்போது கடுமையான சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டதற்குப் பிறகு, ஒரேயொரு முறை அந்தப் பட்டியலை வெளியிட்டார்கள்.

நோய்த் தொற்று இப்படி வேகமாக உயர்ந்துள்ள நிலையில், பரிசோதனைகளை அனைத்து மாவட்டங்களிலும் அதிகப்படுத்துவதுதான், உள்ளபடியே நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முதன்மையான முழுச் செயல்பாடாகும்.

வெளிநாடுகளில் இருந்து அரசாங்கத்தால் கோரப்பட்ட பரிசோதனைக் கருவிகள் உரிய அளவில் வந்து சேராததுதான், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல், முடங்கி இருப்பதற்குக் காரணம் என இன்றுவரை அறியப்படும் நிலையில், உள்நாட்டில் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்போர் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தங்களால் மாதந்தோறும் 14 கோடியே 60 லட்சம் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்பதற்கான திறன் உள்ள நிலையில், ஐ.சி.எம்.ஆர் அமைப்பால் சரிபார்க்கப்பட்ட பரிசோதனைக் கருவிகள் பலவும் எவ்விதப் பயன்பாடுமின்றி, வெறுமனே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் வருவோர், ரெயில்பஸ் நிலையப் பயணிகள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நாள்தோறும் தேவையான அளவுக்குப் பரிசோதனைகள் செய்யக்கூடிய வகையில், தமிழக அரசு இன்னமும் கூடுதலாக சில லட்சம் பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பாமல் இருப்பது ஏன்? மாநிலம் முழுவதும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பது ஏன்?

தமிழகத்தில் மொத்தம் எத்தனை சோதனை மையங்கள் உள்ளன? ஒவ்வொன்றிலும் தினசரி எத்தனை சோதனைகளைக் கையாள முடியும்; இதுவரை சோதனை மையம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் எத்தனை? மாவட்ட வாரியாக பாதிப்பு எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்களைப் பொதுக்களத்தில் உடனடியாக முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்