முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு முககவசம் அணியாதவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-06-14 22:15 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த மே 11-ந் தேதி முதல் தனிக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை சாலைகளில் வாகனங்கள் சரளமாக ஓடத் தொடங்கியது. எனினும், வாகன ஓட்டிகள் முககவசம் அணிவது கட்டாயம் என்றும், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 நபர்களும் அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

போலீசார் தீவிர நடவடிக்கை

எனினும், மோட்டார் சைக்கிள்களில் குடும்பத்தினருடன் பயணிப்பது, நண்பர்களுடன் பயணிப்பது கண்டு கொள்ளப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வாகன ஓட்டிகள் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை போலீசார் தீவிரமாக வாகன சோதனைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதமும், ஆட்டோக்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதமும், மோட்டார் சைக்கிள்களில் ஒன்றிற்கு பின் இருக்கையில் ஆட்களை ஏற்றி வருபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்து சென்னை நகர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்