அகல ரெயில் பாதை பணிக்காக பாறையை வெடி வைத்து தகர்த்தபோது கல் விழுந்து காவலாளி பலி 4 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே அகல ரெயில் பாதை பணிக்காக, கணவாய் மலைப்பகுதியில் பாறையை வெடி வைத்து தகர்த்தபோது கல் விழுந்து கோவில் காவலாளி பலியானார்.

Update: 2020-06-14 20:30 GMT
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில், திம்மரசநாயக்கனூரை சேர்ந்த ஆண்டி (வயது 37), சிவராமன் (40) ஆகிய இருவரும் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த கோவில் அருகே மதுரை-போடி அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டப் பணிகளுக்காக கணவாய் மலைக்குகையை குடைந்து அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காவலாளிகள் 2 பேரும் கோவிலில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் கோவில் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

கல் தாக்கி பலி

அந்தநேரத்தில், அகல ரெயில்பாதை திட்டப் பணிக்காக கணவாய் மலையில் உள்ள பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்பட்டது. பலத்த சத்தத்துடன் வெடி வெடித்தபோது, பாறை கற்கள் நாலாபுறமும் சிதறின. அப்போது, நடந்து சென்று கொண்டு இருந்த ஆண்டி, சிவராமன் ஆகிய 2 பேர் மீதும் கற்கள் விழுந்தன. இதில் 2 பேரும் பலத்தகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

4 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். எந்தவித முன்னறிவிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பாறைகளுக்கு வெடி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஈரோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர், வெடி வைத்த சேலம் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பன், பொன்னரசன், வெடிபொருட்கள் வினியோகம் செய்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்