‘இ-பாஸ்’ நிறுத்தியதாக கூறப்படுவது வதந்தி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் இல்லை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு ‘இ-பாஸ்’ வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுவது வதந்தி என்றும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-06-12 23:26 GMT
‘இ-பாஸ்’ நிறுத்தியதாக கூறப்படுவது வதந்தி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் இல்லை
சென்னை,

சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் வழக்குகளை விசாரித்துக்

கொண்டிருந்தபோது அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், ‘சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் உள்ளதா?‘ என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கவில்லை என்றும், தாங்களும் ஒரு குடிமக்கள் என்ற ரீதியில் பொதுமக்களின் நலன் கருதி இந்த கேள்வியை கேட்பதாகவும் நீதிபதிகள் கூறினர். இதற்கு, தமிழக அரசின் கருத்தை கேட்டு பதில் அளிப்பதாக அரசு பிளடர் தெரிவித்திருந்தார்.

முழு ஊரடங்கு இல்லை

இந்தநிலையில், நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று காலை 10.30 மணி முதல் வழக்குகளை விசாரித்தனர். அனைத்து வழக்குகளையும் மதியம் 12.30 மணிக்குள் விசாரித்து முடித்தனர். பின்னர், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரிடம், முழு ஊரடங்கு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், ‘சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் கொண்ட மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதே நேரம், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கொண்ட மண்டலத்தில் 100 சதவீதம் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது தமிழக அரசிடம் இல்லை‘ என்று பதில் அளித்தனர்.

‘இ-பாஸ்’ நிறுத்தமா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சென்னை உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்லவும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்குள் வருவதற்கும் ‘இ-பாஸ்’ வழங்கப்படுவது இல்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறதே?‘ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு பிளடர், ‘இது வதந்தி. அவ்வாறு இ-பாஸ் வழங்குவதை நிறுத்தவில்லை. அவசிய காரணங்களுக்காக அனைவருக்கும் பாஸ் வழங்கப்படுகிறது‘ என்றார். மேலும், ‘நிபுணர்கள் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவ்வப்போது வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த முடிவை அரசு எடுத்து வருகிறது‘ என்றார்.

இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரி வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்