கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் - மு.க. ஸ்டாலின்
கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் என்றும், ஊரடங்கு முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 பேர் என்றால், தமிழகத்தில் பலியானவர் எண்ணிக்கை 349 பேர். இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இறப்பு விகிதத்தைச் சொல்லி, தனது நடவடிக்கையை நியாயப் படுத்த முதல்வர் முயற்சி செய்கிறார்.
தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்குக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கி இருந்தால், இப்படி ஊரடங்குத் தளர்வுகள் செய்திருக்க வேண்டாமே! ஊரடங்குத் தளர்வுகள்தான், இன்றைக்கு கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் செல்ல காரணம்.
சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டதாகவும் அதனைச் சிறப்புக் குழு அதிகாரிகள் 11 பேர் ஆய்வு செய்யப் போவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுகாதாரத் துறை சொல்லும் கணக்கும், சென்னை மாநகராட்சி சொல்லும் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது;
முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் என்ற அதிகார சக்கரத்தில் சென்னை மாநகரமே சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாகச் செய்தி பரவி வருகிறது. அதனை முதலமைச்சர் மறுத்துள்ளார். அதேவேளையில், பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று கொத்துக் கொத்தாக மக்களிடம் பரவுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை செய்துள்ளது. இதன் பிறகாவது செயல்படுங்கள்.
அனைத்துத் தேவைகளையும் வழங்கி, மக்களை வீட்டுக்குள் தனிமைப்படுத்தி இருக்க வைப்பது அரசின் கடமை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தங்களது தேவையைக் கவனித்துச் செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்துங்கள். மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு தவறுமானால், மக்கள் தங்கள் தேவைக்காக வெளியில் வர வேண்டிய அவசியத்தை அரசாங்கமே உருவாக்குவதாக ஆகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.