பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். மதியழகனின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-06-05 22:30 GMT
சென்னை,

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா ஸ்ரீரங்கைகாடு கிராமத்தை சேர்ந்தவர் பி.மதியழகன் (வயது 40). இவர் இந்திய ராணுவத்தில் அவில்தார் பதவி விகித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் தான் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பனி படை பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பிராங்கி படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் இருந்த ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த மதியழகன் உடல் தனி விமானம் மூலம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை டெல்லி கொண்டு வரப்பட்டது. அங்கு இந்திய வடக்கு பிராந்திய தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் யோகேஷ் குமார் ஜோஷி உள்ளிட்ட அதிகாரிகள் மதியழகனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் இன்று(சனிக்கிழமை) தனி விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.

மதியழகன் மரணம் அடைந்ததையடுத்து அவரது குடும்பத்தினர்-உறவினர்கள் மற்றும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய ராணுவம் 17-வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெத்தலைக்காரன் காடுகிராமத்தை சேர்ந்த மதியழகன், நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் போர் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டு, வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர மரணம் அடைந்த அவில்தார் மதியழகனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். வீரமரணம் அடைந்த அவில்தார் மதியழகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் சேலம் மாவட்ட கலெக்டருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்