எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து “உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்”

“உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-24 23:45 GMT
சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இறை அருளைப் பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு இருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை மக்களுக்கு உணவளித்து, வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது, இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தியது, ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, வயது முதிர்ந்த முஸ்லிம் மகளிர் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு இணை மானியம் வழங்கியது, உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியத்தை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை ஆண்டுதோறும் விலையில்லாமல் வழங்கி வருவது, மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கி வருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இந்த புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக் கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக ரமலான் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம் அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக்கொள்வோம்.’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கே.எம்.காதர் மொய்தீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., ஜி.கே.வாசன் எம்.பி., எச்.வசந்தகுமார் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி. தொல்.திருமாவளவன் எம்.பி., டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஏ.சி.சண்முகம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் கோல்டன் அபுபக்கர், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலையச்செயலாளர் சம்சுதீன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அகமது, எல்.ஜே.கே. நிறுவனத்தலைவர் நெல்லை ஜீவா ஆகியோரும் ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்