கட்டுப்பாடுகளுக்கு பலன் இல்லையா? ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் அடங்க மறுக்கும் கொரோனா தமிழகத்தில் 3-ல் 2 பங்கு நோயாளிகள் தலைநகரில் உள்ளனர்

அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், சென்னையில் கொரோனா அடங்க மறுக்கிறது. நேற்று ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-05-24 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது.

இதற்கு தலைநகர் சென்னையை தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால் எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கட்டுப்பாடுகள் விதித்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனா அடங்க மறுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 15 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு பேர் சென்னையில் உள்ளனர். அதாவது சென்னையில் 9,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயருகிறது.

தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவீதம் என்ற அளவில் இருந்து வரும் நிலையில் நேற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் கொரோனா நோய் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 429 ஆண்களும், 330 பெண்கள் என 759 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 49 பேரும் அடங்குவார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்து உள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 7 ஆயிரத்து 491 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். 7 ஆயிரத்து 915 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்து 518 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 68, 54 வயது இரு ஆண்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது பெண்ணும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆணும், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது ஆணும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது தெரியவந்து உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்ந்து இருக்கிறது.

மேலும் சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 72 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், விழுப்புரம், தூத்துக்குடி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 876 ஆண்களும், 5 ஆயிரத்து 631 பெண்களும், ஐந்து 3-ம் பாலினத்தவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் 625 பேரும், செங்கல்பட்டில் 39 பேரும், திருவள்ளூரில் 22 பேரும், காஞ்சீபுரத்தில் 13 பேரும், நெல்லை, திருவண்ணாமலையில் தலா 11 பேரும், தூத்துக்குடியில் 5 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், ராமநாதபுரம், சேலத்தில் தலா 3 பேரும், விருதுநகர், தென்காசி, மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 7 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த 5 பேரும் என தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 513 ஆண் குழந்தைகள் மற்றும் 435 பெண் குழந்தைகள் என 948 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 8 ஆயிரத்து 577 ஆண்கள் மற்றும் 4 ஆயிரத்து 704 பெண்கள் மற்றும் ஐந்து 3-ம் பாலினத்தவர் என 13 ஆயிரத்து 286 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 786 ஆண்கள் மற்றும் 492 பெண்கள் என 1,278 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்து 155 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 340 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 216 மாதிரிகளில் கொரோனா வைரசின் பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது. மேலும் 612 மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்