மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மும்பை மாநகரின் மாஹிம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசை அமைத்து தங்கியுள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மக்களும் தங்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்படி தமிழக அரசை வேண்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தங்கியிருக்கும் வாசை நகரம் மும்பையில் இருந்து 70 கி.மீ தொலைவில் தான் உள்ளது. அதனால் அவர்களை அங்கிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களையும், மும்பையில் ஏற்கனவே தவித்து வரும் 800 பேரையும் ரெயில் மூலம் தமிழகத்திற்கு அழைத்துவர முடியும். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
அதிகாரிகள் நிலையில் பல முறை வலியுறுத்தியும் மராட்டியத்தில் வாழும் மக்களை மீட்டு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்- அமைச்சர் நேரடியாக தலையிட்டு, மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.