ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு நேரடி நிதி உதவி தேவை - மத்திய நிதி மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு பாலிடிக்ஸ் செய்ய வேண்டாம். ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு நேரடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரியை மு.கஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவிட்-19 ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற “தூரமும், திசையும், எல்லையும் அறியாத” துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் நமது விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் “ஆக்கப்பூர்வமான நிவாரணங்களை” கொடுக்காமல், “அலங்காரப் பேச்சுகள்” மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பா.ஜ.க. அரசு நினைத்துக்கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
“ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்” என்ற பா.ஜ.க.,வின் அரசியலுக்கான “தலைப்புச் செய்தி’‘ ஏழை-எளிய மக்களுக்கு “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 2-வது நாள் அறிவிப்பும் இருக்கிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு மேலும் “கிரெடிட் கார்டு” கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதேபோல் நடைபாதை வியாபாரிகளுக்குப் ரூ.10 ஆயிரம் கடனாம். சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு அங்கேயே முதல் உதவி செய்யாமல், “ரத்தம் கொட்டட்டும். தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம். அதுவரை வலியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வதைப் போல இருக்கின்றன அந்த அறிவிப்புகள். முதல் உதவியைப் போன்றது, உடனடியாகக் கொடுக்கப்படும் நிவாரணப் பணம். ஏற்கனவே வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல், பல நூறு கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தலையில் மீண்டும் கடன் என்ற “பாறாங்கல்லை” ஏற்றி வைப்பது எந்த வகையில் நிவாரணம்?.
நிதி மந்திரியின் இந்த நீண்ட நேரச் சொற்பொழிவுக்குப் பதிலாக கருணாநிதி ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது போல் தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ.60 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது போல் ஒரே கையெழுத்தில், இந்திய விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து மீளாத் துயரில் மூழ்கிக்கிடக்கும் அவர்களை கைதூக்கிக் கருணை காட்டிட ஏன் நிதி மந்திரி முன்வரவில்லை?
31.3.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த “நிலை அறிக்கையில்” மத்திய உள்துறை செயலாளரே 4.14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தான் நாட்டில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கும் போது நிதி மந்திரி ரேஷன் வழங்குவதால் எப்படி 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது புலப்படவில்லை? ஏன் இத்தகைய முரண்பாடு?.
பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் “பகட்டு அறிவிப்புகளை” வெளியிட்டு “பாலிடிக்ஸ்” செய்வதைத் தயவு செய்து தவிர்த்து விட்டு, கோவிட்-19 துயரில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஏழை-எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதி மந்திரி, மேலும் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும்.
இனி தாமதம் உயிர்களைப் பலிகொண்டுவிடும் என்ற கசப்பான உண்மையை மத்தியில் ஆளவந்தார் உணர்ந்திட வேண்டும். ஆகவே, விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உள்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி பண உதவி வழங்கியும் பாதிக்கப்பட்ட அனைவரையும் “வறுமை, வெறுமை” ஆகிய பலிபீடத்திலிருந்து மீட்டுப் பாதுகாத்திட வேண்டும்.
அதைவிடுத்து “லேவா தேவி” நடத்துவதும், “பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக்கொள்” என்று சொல்வதும், குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. “ஆபத்துக்கு உதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தைத் தீராத் தண்ணீர்” போன்றதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் ஆரவாரமான அறிவிப்புகள். எனவே உப்பரிகையிலேயே வீற்றிருந்து உலகத்தைப் பார்க்காமல், சற்று கீழே இறங்கி வந்து நாட்டின் நிதர்சனமான நிலை கண்டு, கருணை மழை பொழிந்திட வேண்டும் என்று, தி.மு.க.வின் சார்பில் மத்திய அரசை மிகுந்த அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘நீட்’ தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் படுகுழியில் தள்ளி தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும் சமூகநீதியைத் தட்டிப்பறிக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் வம்படியாகப் பின்பற்ற மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான, ஏறக்குறைய 8 ஆயிரம் இடங்களை இந்த 3 ஆண்டு காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமாகத் தட்டிப் பறித்துவிட்டது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களையும் வழங்க மறுக்கிறது. சமூகநீதிக் காவலர் “தங்கத் தட்டில்” வைத்துக்கொடுத்த இடஒதுக்கீட்டை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தட்டிப்பறிப்பது இதயமற்ற செயல்.
“நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்” என்று, பிரதமர் நரேந்திர மோடி 2019 தேர்தல் பிரசாரத்தில் பெருமையாகச் சொல்லிக்கொண்டது உண்மையெனில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலனில் உள்ளபடியே அக்கறை இருக்குமெனில், மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.