டாஸ்மாக் இணையாக வேறு துறைகள் மூலம் வருவாய் ஈட்ட 5 ஆண்டுகளாகும் தமிழக அரசு வாதம்
டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
சென்னை
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தொடங்கிய பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் எனவும் வாதத்தை முன்வைத்துள்ளார்.